அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ
பரக்கத்துஹு...
இஸ்லாமிய சமூகம் பலவாறான சிக்கல்களுக்கும்
அடக்குமுறைகளுக்கும் ஆளாகிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் ஒட்டுமொத்த சமுதாயமும்
தலைகுனியும் அளவிற்கு போய்விட்டது மாபெரும் மக்கள் இயக்கமாக விளங்கிவந்த ததஜ
என்னும் இயக்கத்தின் இந்நாள் முன்னாள் தோழர்கள் பொதுவெளியில் அடித்துக்கொள்வது துரதிர்ஷ்டவசமானது.
இயக்கவெறி மேலோங்கி சமுதாயத்தை ஏனையவர்கள்
ஏளனமாக பேசும் நிலைக்கு தள்ளிவிடும் வகையில் பொதுவெளியில் அடித்துக்கொள்ளும்
இயக்கவாதிகள் மத்தியில் நாம் வாழ்கிறோம்.
இயக்கவாதிகளின் நிர்வாக போரில் நுழைந்து
குழப்பம் விளைவிக்கவும் அடித்துக்கொள்பவர்கள் சேர்ந்துவிடவேக்கூடாது என்ற நோக்கில்
தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கவும் பலர் ஆரம்பித்துள்ள இந்நிலையில் சாமானிய
முஸ்லிமாக எப்படி இவற்றை சிந்தித்து எதிர்கொள்ளவேண்டும் என்பதை ஒவ்வொருவரும்
சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். சிந்தனையை தூண்டும் விதமாகவே சில குறிப்புகளை உங்களுடன்
பகிர்கிறேன்.... இன் ஷா அல்லாஹ்
"ஆடுகள் அடித்துக்கொண்டால் ஓநாய்களுக்கு
கொண்டாட்டம்" என்பதையம் மனதில் ஏற்றிக்கொண்டு பின்வருபவற்றை படிக்கவும்.....
தனிமனித தவறுகள் பற்றிய நம் அணுகுமுறை
எவ்வாறு இருக்கவேண்டும்?
இவ்வுலக வாழ்க்கை தற்காலிகமானதே, மறுமை வாழ்வே நிரந்தரம். இம்மையில் நம்முடைய செயல்கள், அமல்கள் அனைத்தும் மறுமை வெற்றிக்காகவே அமையவேண்டும். மறுமை மீதுள்ள உறுதியான
நம்பிக்கையே நம்மை மாற்று நம்பிக்கையுடைவரிடமிருந்து வேறுபடுத்திருகிறது.
மறுமையின்மீதுள்ள நம்பிக்கைதான் நம்மை உண்மையாளர்களாகவும், நல்லவர்களாகவும் இம்மையில் வாழ வழிவகுக்கிறது. மறுமை சிந்தனையும் இறையச்சமும்
இருப்பவர்கள் ஒருபோதும் வழிதவற வாய்ப்பில்லை!
இருந்தாலும், மனிதன்
என்பவன் பலகீனமானவன், தவறிழைக்கக்கூடியவன், இறையச்சமும் மறுமை நம்பிக்கையும் இருக்கும் மனிதன் தன் தவறை உணர்வதாயின்
கருணையே உருவான எல்லாம் வல்ல நாயனிடம் மன்னிப்பை இறைஞ்சி திருந்திக்கொள்ளவேண்டும்.
ஒருவேளை மனிதன் திருந்தவில்லையெனில் அதற்க்கு மறுமையில் அவனே பதிலளிக்கவும், தண்டனைகளை பெறவும் தகுதியானவன்.
தனிமனிதர்கள் செய்யும் தவறுகள் அவர்களுக்கும்
அல்லாஹ்வுக்கும் இடையிலானவற்றை அல்லாஹ் பார்த்துக்கொள்வான் என்று எண்ணாமல் அதில்
தீர்ப்பளிப்பவர்களாக நம்மில் பலரும் இருக்கவேண்டாம்.
உலகின் சட்டப்படி
“உரியவர்கள்” தண்டனை கொடுத்தாலும் தவறு செய்தவர் அல்லாஹ்விடம் தௌபாஹ் செய்து மீண்டால் அல்லாஹ் அவருக்கு அருள்புரிவான் என்பதை
உணர்ந்து நாம் இம்மையில் நடந்து கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வின் அதிகாரத்தை
கையிலெடுத்துக்கொண்டு ஒருவரை நிரந்தர குற்றவாளியாக கருதுவதும், ஏளனம் செய்வதும், குத்திக்காட்டுவதும் தவறு, நமக்கு எள்ளளவும் உரிமையில்லா செயல் என்பதனை நாம் உணர்ந்து நடந்திட வேண்டும்.
மனிதனுக்கு மனிதன் செய்த தீமையை மனிதன்
மன்னிக்காதவரை அல்லாஹ் மன்னிக்கமாட்டான். என்றாலும், மனிதன்
செய்யும் பெரும்பாவங்களை கூட அல்லாஹ் நாடினால் மன்னிப்பான்.
நம் சகோதரன் செய்த
தவறை நாம் மறைத்தால் நம் தவறுகளை அல்லாஹ் மறைப்பான் என்று நம்பும் நாம் நம் சகோதரன் செய்த
தவறுகளை பொதுவெளியில் கூவி அம்பலப்படுத்தலாமா? இங்கே “மறைப்பது” என்பது தவறுக்கு உறுதுணையாவதல்ல மாறாக தவறிலிருந்து மீள
உதவுவதும் அதை பகிரங்கபடுத்தி அவமானப்படாமல் காப்பதுமாகும்.
சகோதரனின் மாமிசத்தை
மாறி மாறி உண்ணும் எவரும் நிச்சயமாக கொள்கை பேச தகுதியற்றவர்களே!!! தனிமனித
தவறுகளை அல்லாஹ்விடம் விட்டுவிடாமல் சத்தியம் செய்வதும் துருவித்துருவி ஆராய்வதும்
வீண்செயல் என்று உணரவேண்டும்.
இயக்கவெறியா இறைப்பற்றா?
ஒரு ஜமாஅத்தோ ஒரு இயக்கமோ மார்க்க கொள்கை
சார்ந்து எடுக்கும் தவறான நிலைப்பாடுகள் ஒட்டுமொத்த சமுதாயத்தையும்... ஏன் ஒட்டுமொத்த
சமூகத்தையும் கூட தவறாக பாதிக்கும் வாய்ப்புள்ளது.
அதுபோலவே, ஒரு ஜமாஅத்தோ ஒரு இயக்கமோ அரசியல் சார்புடைய நிலைப்பாடுகளை எடுக்கும்போது
அத்தகைய நிலைப்பாடுகளும் நேரடியாகவோ மறைமுகமாகவோ சமுதாயத்தை பாதிக்க
வாய்ப்புள்ளது.
எனவே, மார்க்க கொள்கை, சமுதாய பிரச்சினைகள் அரசியல் சார்ந்த நிலைப்பாடுகள்
போன்றவற்றில் ஜமாஅத் மற்றும் இயக்க தலைமைகள் எடுக்கும் நிலைப்பாடுகள் சாமானிய
மக்கள் அப்படியே கண்ணை மூடிக்கொண்டு ஏற்கமுடியாது, ஏற்றுக்கொள்ளவும்
கூடாது. "இவர்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்" என்ற எண்ணமே நம்மை நாமே
அறிவற்றவர்களாக ஆக்குவதற்கு போதுமானது.
அல்லாஹ் மனிதனுக்கு அமானிதமாக தந்துள்ள பகுத்தறிவை பயன்படுத்தி, யார் சொல்கிறார்கள் என்று பாராமல், என்ன சொல்லப்பட்டுள்ளது என்று சீர்தூக்கி
பார்த்து, ஆய்வு செய்து நம் நிலைப்பாடுகளை எடுக்க
வேண்டும்.
மார்க்க சம்மந்தனமானது என்றால் குரான் மற்றும் நபிவழி ஒளியில்
நிலைப்பாடுகளை அமைத்துக் கொள்ளவேண்டும்.
மனோ இச்சைகளால் ஆன ஆதாரமில்லா வாதங்களையும், கொள்கைகளையும் பின்பற்றுவதில் இருந்து தவிர்ந்து கொள்ளவேண்டும்.
அரசியல்
நிலைப்பாடுகளை சமுதாயத்துக்கும் சமூகத்துக்கும் பயனளிக்கும் திறந்த
மனப்பான்மையுடன் அளவீடு செய்து சுயமாக முடிவெடுக்க வேண்டும்.
சமுதாய இயக்கங்கள், ஜமாஅத்கள் எடுக்கும் நிலைப்பாடுகளை உரசிப்பார்க்கவும் தவறென்றால்
எதிர்த்து குரலெழுப்புவதும் ஒவ்வொரு பொறுப்புள்ள சாமானிய முஸ்லிமுக்கும் உள்ள உரிமையாகும், அதை தட்டிப்பறிக்க எவருக்கும் உரிமை இல்லை.
ஒருவேளை நாம் தவறான நிலைப்பாடுகளை
எடுக்கும் இயக்கத்தின் அல்லது ஜமாஅத்தின் உறுப்பினராக இருக்கும் தருணத்தில்
உள்ளிருந்தே தடுக்க முயலவேண்டும், முடியவில்லை என்றால் வெறுத்து ஒதுங்க
வேண்டும். அமைப்பின் தவறான நிலைப்பாடுகளை நேரான வழியில், வரம்பு மீறாமல் சமுதாயத்துக்கு எடுத்தியம்புவதும் குற்றமில்லை.
இயக்கத்தின் மீது பற்று வைக்காமல்
இறைக்காக்கவே இயக்கம் என்று உணர்ந்து இறைப்பற்று மேலோங்கியவர்களாக நடக்க வேண்டும்.
இயக்கப்பற்று குழப்பவாதத்தில் கொண்டு
சேர்க்கும்!
கொள்கைகளில் உடன்பாடு கொண்டு ஒரு
கட்டமைப்பில் இருக்கும்போது அதன் நிர்வாக கட்டமைப்பை உதாசீனப்படுத்துவதும் அதனால்
எடுக்கப்படும் நிர்வாக நடவடிக்கைகளுக்கு எதிராக வரம்பு மீறி வாதம் செய்வதும், தலைமைக்கு எதிரான கிளர்ச்சி செய்வதும், குழப்பத்தை தூண்டுவதும் கட்டமைப்புக்கு
வெளியில் உள்ளவர்களை சேர்ந்து கொண்டு பொதுவெளியில் அந்த கட்டமைப்பையே அழிக்கும் வண்ணம் செயல்படுவதும்
தவறான செயல்பாடுகளே!
எவ்வளவு தான் கொள்கையை பேணினாலும் நிர்வாக விஷயங்களால் உண்டான
நடவடிக்கைகளை அந்த கட்டமைப்பையே ஒழித்துக்கட்டும் விதமாக செயலாற்றுவதை மார்க்கமே
ஒத்துக்கொள்ளாததாகும்.
தமக்கு நிர்வாக ரீதியில் பாதிப்பு உண்டானது என்னும்
தருணத்தில் நேற்றுவரை போற்றிய நிர்வாகத்தையும் கொள்கைகளையும் இன்று வெளியில் வந்து
ஏளனமும், கேலியும் செய்து அவமதிப்பது நம்மை
"நயவஞ்சகர்களாகவே" பொது சமூகத்துக்கு அடையாளம் காட்டும் என்பதை
உணரவேண்டும்.
இயக்கங்கள், ஜமாஅத்கள்
மீது அளவுகடந்த “பக்தி” வைத்திருந்தால் மட்டுமே அந்த இயக்கமோ ஜமாஅத்தோ நம்மீது
நடவடிக்கை எடுக்கும்போது அதை பொறுக்கமுடியாமல் பொருமும் நிலைக்கும்,
"நாம் எவ்வளவு தியாகங்கள் செய்தொம், நம்மை இப்படி வெளியேற்றிவிட்டார்களே? இவர்களை அழித்தே தீரவேண்டும்" என்ற
கீழ்த்தரமான மனநிலைக்கு தள்ளப்படுகிறோம்.
மாறாக மார்க்கத்துக்காக, கொள்கைக்காக
தியாகங்கள் செய்தவர்களை இயக்கங்கள், ஜமாஅத்கள் புறக்கணித்தாலும், அல்லாஹ் அதற்கான நற்கூலியை மறுமையில் அளிப்பான் என்று ஏன் நம்பிக்கை கொள்ள
மறுக்கிறோம்? நீதிக்காக போராடுவதில் தப்பில்லை, ஆனால் நீதிக்காக போராடுகிறோம் என்னும் போர்வையில் தாம் மார்க்கத்துக்காக
செய்தவற்றை இயக்கத்துக்காகவே செய்தோம் என்று வாக்குமூலம் அளிப்பது அல்லாஹ்வின்
கோபத்துக்கு இட்டு செல்லும் என்பதை ஏன் உணர்வதில்லை?
நிர்வாக சிக்கலால் அடித்துக் கொள்வோர்
கொள்கையில் உடன்பட முடியுமா?
நேற்றுவரை கொள்கையால் இணைந்து இருந்து விட்டு
இன்று நிர்வாக சிக்கலால் பிரிந்துவிட்ட பின் ஒட்டுமொத்த கட்டமைப்பையே கேலியும்
கிண்டலும் கீழ்த்தரமாக விமர்சிக்கவும் செய்பவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்
அத்தகையவர்கள் செய்யும் ஆய்வுகளையும் மார்க்க நிலைப்பாடுகளையும் கூட அப்படியே
ஏற்றுக்கொண்டுள்ளோமே அவற்றையும் சீர்தூக்கி மீளாய்வு செயது பார்த்தால் அது கொள்கை
வேற்றுமையில் தான் கொண்டு சேர்க்கும் .
நேற்று வரை தலைவர்கள் சொல்வது தான் கொள்கை
என்று நடைமுறைப்படுத்தினோம், இன்று தலைவர்களையே
தூக்கிபோட்டுவிட்டோம், தகுதியில்லாத “ஏமாற்றுப் பேர்வழிகள், அவதூராளிகள்” என்று குற்றம் கண்டு. தகுதியில்லாதவர்கள் என்று இன்று நாம் சொல்பவர்கள் செய்த
ஆய்வுகளை மட்டும் நாம் இது வரை எப்படி ஏற்றோம்? , இனி எப்படி ஏற்கப் போகிறோம்? எனவே கொள்கையும் வேறாகிவிட்டது என்பது தானே
நிதர்சனம்???
அல்லது "கொள்கை ஒன்றுதான்" என்று
இன்னும் சொல்வதாயின் "கொள்கை ஒற்றுமை மட்டுமே நிரந்தரமான ஒற்றுமை, மற்றனைத்தும் போலியான ஒற்றுமை" என்று நம்புபவர்கள் நிர்வாக தவறுகளையும் , தனிமனித தவறுகளையும் அடிப்படையாக வைத்து அடித்துக்கொள்வது எதனால்? எங்கே போயிற்று ஒற்றுமை? எங்கே போயிற்று அழகிய பொறுமை? சிந்திப்போமா .....
இஸ்லாமியர்களுக்கான மிக முக்கியமான கடமை
"இஸ்லாமிய விழுமங்களுக்கு சாட்சி பகிர்தல்”. இஸ்லாத்தை போதிப்பது மட்டுமல்ல, சொல்லாலும் செயலாலும் இஸ்லாத்துக்கு சாட்சியாக இருக்கவேண்டும். கொள்கை ஒற்றுமை
பற்றி பேசும் நாம் அதனை மெய்ப்பிக்கும் சாட்சியாக இல்லை என்றால் நம் கடமைகளிருந்து
தவறியராவோம் என்பதை மறந்துவிடவேண்டாம்.
குடும்பத்தை விட்டுவிட்டு என்ன மார்க்கப்பணி?
இஸ்லாம் என்னும் மனிதகுல முழு வாழ்க்கைநெறி
மார்க்கத்தை பின்பற்றுவதில் நடுநிலையை மேற்கொள்ள சொல்கிறது. இஸ்லாமிய குடும்பவியலை
பின்பற்றும் எவரும் "குடும்பத்தை கூட அதிகமாக நாங்கள் நேசிக்கவில்லையே, இயக்கத்துக்காகத்தானே உழைத்த்தோம், எங்களை ஒதுக்கிவிட்டீர்களே?"
என்று ஒரு நிர்வாகத்தை பார்த்து கேட்கும் முன் சிந்திப்போம்
இஸ்லாம் குடும்பத்தை கூட ஒதுக்கிவிட்டு தான் மார்க்கப்பணி செய்ய சொல்கிறதா என்று ???
நமக்கு அழகிய முன்மாதிரியாக வாழ்ந்து காட்டிய
நபி (ஸல்) அவர்களது வாழ்க்கை முறையை படித்தாலே புரியும் நபி (ஸல்) அவர்கள்
மார்க்கப்பணியையும், கும்பத்துக்கான தம்முடைய பொறுப்புகளையும், கடமைகளையும் கலர்த்தியதில்லை, காலமேலாண்மையை திறன்பட செயல்படுத்தி
காட்டினார்கள். அன்னாரின் வழியில் வந்த நாம் குடும்பத்தை விட அதிகமாக
இயக்கத்துக்காகவும் ஜமாஅத் காகவும் தானே செயல்பட்டோம் என்று சொல்வது இன்னும் நாம்
பக்குவமடையவில்லை, ஒரு குடும்பத்தலைவனாக தோல்வியடைந்துவிட்டோம் என்பதைத்தான் காட்டுகிறது.
சுயபரிசோதனை செய்வோம்....திருத்திக்கொள்வோம்
சமுதாயமாற்றம் என்பதன் அடிப்படை தனிமனித
மாற்றமே!
“மாற்றம்” என்பது முதலில் தனிமனிதரிடமிருந்து
ஆரம்பமாகவேண்டும்.
நாம் பெற்ற கல்வி மற்றும் அறிவு நமக்கு ஒரு நல்ல தாக்கத்தை
ஏற்படுத்தவேண்டும், மனதை பக்குவப்படுத்தவேண்டும், அப்போது தான் மாற்றம் ஏற்படும்.
அந்த மாற்றத்தை முதலில் நம் குடும்பத்தார்க்கு
எத்திவைக்கவேண்டும்.
பின்னர் படிப்படியாக உற்றார் உறவினர்கள், நண்பர்கள், அண்டை வீட்டார் என்று மாறி இறுதியில் சமூக
மாற்றமாக மாறும்!.
நான் பக்குவமடையமாட்டேன் ஆனால் சமுதாயம் மாறவேண்டும் என்று
நினைப்பது ஒரு மாயை மட்டுமே !!!!
பக்குவப்படுவோம்.....மாற்றத்தை
உருவாக்குவோம்......
அன்புடன்,
சுபுஹான் சுல்தான்
Comments
Post a Comment