அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சொந்தங்களே....
பாரமானதா குர்பானி???
## அல் குர்ஆன் 108 : 1-2 (முஹம்மதே!) கவ்ஸரை உமக்கு வழங்கினோம். எனவே உமது இறைவனைத் தொழுது அவனுக்காக
அறுப்பீராக!
## அல் குர்ஆன் 6:162 எனது தொழுகை, எனது வணக்க முறை, எனது வாழ்வு, எனது மரணம் யாவும் அகிலத்தின் இறைவனாகிய
அல்லாஹ்வுக்கே உரியன; அவனுக்கு
நிகரானவன் இல்லை; இவ்வாறே
கட்டளையிடப்பட்டுள்ளேன்; முஸ்லிம்களில்
நான் முதலாமவன்'' என்றும் கூறுவீராக!
புனித
ஹஜ்ஜை முன்னிட்டு வசதிவாய்ப்புள்ளவர்கள் மீது " உழுஹிய்யா" (குர்பானி) என்னும்
அறுத்து பலி இடுதல் கடமையாகும். குர்பானி தியாகத்தை வலியுறுத்தும் ஒரு இறைவழிபாடாகும்
(இபாதத்)
**குர்பானி கொடுப்பது முஸ்லிம்களின்
வழிமுறையாக அல்லாஹ்வால் ஆக்கப்பட்டுள்ளது. இதை நிறைவேற்றுபவர் முஸ்லிம்களின்
வழியில் நடந்தவர் ஆவார். யார் (பெருநாள்) தொழுகைக்கு முன்னால் (பிராணியை)
அறுக்கின்றாரோ அவர் தம் (சொந்த தேவைக்காகவே) அறுத்தவர் ஆவார். யார் தொழுகைக்குப் பின்னால்
அறுக்கிறாரோ அவரது (குர்பானி) வழிபாடு பூர்த்தியாகிவிடும். மேலும் அவர்
முஸ்லிம்களின் வழிமுறையைப் பின்பற்றியவர் ஆவார் என்று நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி), நூல் : புகாரி (5546)
**
நம்
மார்க்கத்தின் தலைவர் நபி இப்ராஹீம் (அலை) மற்றும் அவரது அரும்புதல்வர் நபி இஸ்மாயில்(அலை)
அவர்களது மாபெரும் தியாகத்தை நினைவு கூறும்பொருட்டு "அறுத்து பலியிடுதல்"
நபிவழியாக... ஒரு இபாதத்தாக... கடைமையாக (வலியுறுத்தப்பட்ட சுன்னத்தாக)......ஆகியது.
இந்த இபாதத்தினை தவறாமல் நிறைவேற்றும் நன்மக்களாக நம் அனைவரையும் ஆக்கி அருள்புரிவானாக
என்று ஓரிறையிடம் வேண்டுகிறேன்....
என்றாலும்...
வசதியில்லாதவர்கள் தங்களை வருத்திக்கொண்டு கடன் வாங்கி குர்பானி கொடுக்கவேண்டியதில்லை.
## அல் குர்ஆன் 2 : 286 அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக்
கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை;
இந்த
வலியுறுத்தப்பட்ட சுன்னத்தை நிறைவேற்றும்போது நபி வழியில் அல்லாமல் தேவை இல்லாத அனாச்சாரங்களை
புகுத்துதல் கூடாது. எப்படி தொழுகையை நிறைவேற்ற அடிபிழறாமல் நபிவழியை பின்பற்றுகிறோமோ
அதுபோல் “உழுஹிய்யா” (குர்பானி) என்னும் இபாதத்திலும் நபிவழியே உத்தமம்!
** நீங்கள் குர்பானி கொடுப்பவராக இருந்து
துல்ஹஜ்ஜு பிறையைக் கண்டால் குர்பானி கொடுக்கும் வரை தனது முடியை, நகத்தை
வெட்ட வேண்டாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி), நூற்கள் :
முஸ்லிம் (3655), நஸயீ (4285) **
குர்பானிப் பிராணிகள் நல்ல திடகாத்திரமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும். பொதுவாக எந்தக்
குறையும் இல்லாததாக இருக்க வேண்டும்.
ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவைகள் மட்டுமே
பலி கொடுக்க அனுமதிக்கப்பட்டவைகள். பால் ஊட்டும் கால்நடைகளை பயன்படுத்த தடை உள்ளதால்,
பால் தரும் பருவத்தில் உள்ள ஆடு, பசு உள்ளிட்டவைகளை தவிர்க்க வேண்டும். கோழியை குர்பானி கொடுக்க
நபிவழியில் எந்த முகாந்திரமும் இல்லை.
** தெளிவாகத் தெரியும் நொண்டி, தெளிவாகத்
தெரியும் பார்வைக் குறை, தெளிவாகத் தெரியும் நோய், எலும்பில்
மஜ்ஜை இல்லாத மெலிவு ஆகிய குறைபாடுகளுடையவற்றைக் குர்பானி கொடுப்பது கூடாது என்று
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அல்பரா பின் ஆசிப் (ரலி) நூற்கள்
: திர்மிதீ(1417), அபூதாவூத்(4293), நஸயீ(4294) , இப்னுமாஜா (3135), அஹ்மத் (17777) **
** (ஒரு அன்சாரித் தோழர் நபி (ஸல்) அவர்களுக்காக
ஆடு அறுப்பதற்காக) கத்தியை எடுத்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
பால்தரும் ஆட்டை அறுக்க வேண்டாம் என நான் உம்மை எச்சரிக்கிறேன் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), முஸ்லிம் : (3799) **
பெருநாள் தொழுகைக்கு முன்னர்
ஆட்டை அறுப்பது மாமிசத்துக்காக அறுத்ததாகவே கொள்ளப்படும், தொழுகைக்கு
பின்னர் அருப்பதுவே குர்பானியாக கருதப்படும், ஒருவருக்கு ஒரு ஆடு குர்பானி கொடுக்க போதுமானது என்பதாக
நபிவழியில் உள்ளது என்றாலும் அதற்க்கு வசதி இல்லை என்றால் கூட்டு குர்பானியும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
** ஒரு மாடு ஏழு நபருக்கும் ஒரு ஒட்டகம் ஏழு
நபருக்கும் (கூட்டுசேர போதுமானதாகும்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி),
நூல் : அபூதாவூத் (2425) **
ஆனால்
வசதி வாய்ப்பிருந்தும், செலவை குறைப்பதற்காக கூட்டு குர்பானியை கொடுப்பதும், யார் கொடுக்கிறார்கள் எங்கே
கொடுக்கிறார்கள்,
எதை
கொடுக்கிறார்கள்,
குர்பானி
பிராணி நபியின் கட்டளைக்கு உட்பட்டதாக உள்ளதா என்றல்லாம் தெரியாமல், அறிய கூட முற்படாமல் பணம் கொடுத்தால் குர்பானி கொடுத்தாகிவிட்டது என்ற
எளிமை போக்கை இன்று காணமுடிகிறது. இன்று ஏறத்தாழ அனைத்து இயக்கங்களும் கூட்டு குர்பானியை வலியுறுத்துகிறது, அதை ஏழைகளுக்கு பங்கிட்டு
அளித்து சிறப்பான சேவையும் செய்கின்றன, மறுப்பதற்கில்லை. என்றாலும், பணம் கொடுக்கிறோம், நம் வீட்டிற்கு ஒரு பங்கும்
வந்துவிடுகிறது என்று இருக்கும் நம்மில் பலரும் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்... வசதி
இருக்குமேயானால்,
வாய்ப்புகள்
இருக்குமேயானால்,
எதனால்
தனியாக ஒரு ஆட்டை குர்பான் கொடுப்பதில் இருந்து தவிர்ந்துவருகிறோம்?? சிந்திப்போம்
மேலும், குர்பானி இறைச்சியை
நாமும் உண்டு,
அக்கம்
பக்கத்தினருக்கும்,
ஏழை
எளியவர்க்கும்,
நம்
குடுமபத்தில் உள்ளவர்களுக்கும் பகிர்ந்து அளிக்கவேண்டும். பகிர்ந்தளிப்பதில் எந்த வரைமுறையையோ
குறிப்பிட்ட அளவுகளையோ அல்லாஹ்வோ ரசூல் (ஸல்) அவர்களோ நிர்ணயிக்கவில்லை என்னும் போது
அதிக நன்மை ஈட்டும் பொருட்டு நம் பகிர்தலை அமைத்துக்கொள்ளலாம்.
## அல் குர்ஆன் 22 : 36 இன்னும் (குர்பானிக்கான)
ஒட்டகங்கள்; அவற்றை உங்களுக்காக அல்லாஹ்வின் அடையாளங்களிலிருந்தும் நாம்
ஆக்கியிருக்கிறோம்; உங்களுக்கு அவற்றில் மிக்க நன்மை உள்ளது; எனவே
(அவை உரிய முறையில்) நிற்கும் போது அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயரைச் சொல்(லி
குர்பான் செய்)வீர்களாக; பிறகு, அவை தங்கள் பக்கங்களின் மீது
சாய்ந்து கீழே விழுந்(து உயிர் நீத்)த பின் அவற்றிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; (வறுமையிலும்
கையேந்தாமல் இருப்பதைக் கொண்டு) திருப்தியாய் இருப்போருக்கும், இரப்போருக்கும்
உண்ணக் கொடுங்கள் - இவ்விதமாகவே, நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு
அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறோம்.
ஏழைகள்
என்று சொல்லும்போது நம்மோடு பெருநாள் கொண்டாடும் முஸ்லிம்களுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும்
என்றாலும்,
நம்மருகே
வசிக்கும் ஏழைகளான மாற்றுமதத்தவர்களுக்கும் அளிப்பதில் எந்த தடையும் இல்லை. மதம் கடந்த
மனிதாபிமானம் இன்று இன்றியமையாதது என்பதை மனதில் கொண்டு நாம் செயல்படுவது நன்று.
## அல் குர்ஆன் 22 : 37 (எனினும்), குர்பானியின்
மாமிசங்களோ, அவற்றின் உதிரங்களோ அல்லாஹ்வை ஒரு போதும் அடைவதில்லை; ஆனால்
உங்களுடைய தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும்; அல்லாஹ்
உங்களுக்கு நேர்வழி காண்பித்ததற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்தும் பொருட்டு -
இவ்வாறாக அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்; ஆகவே
நன்மை செய்வோருக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக!
எனவே, சொந்தங்களே, வலியுறுத்தப்பட்ட இந்த அழகிய
சுன்னத்தை நபிவழியில் செயல்படுத்துவோம், வசதி வாய்ப்பிருந்தால் தனியாக குர்பானி கொடுங்கள், இயலாதவர்கள் கூட்டு குர்பானி
என்னும் அனுமதியை பயன்படுத்துவோம். கூட்டு குர்பானி கொடுப்பது தான் நன்மை, அது தான் நமக்கு எளிதானது
என்ற எண்ணத்தை மாற்றிக்கொண்டு குர்பானி எதற்கு கொடுக்கிறோம் என்னும் உயரிய கோட்பாட்டின்
தன்மைகளை உணர்ந்து அல்லாஹ்வுக்காக, அவன் பெயரை சொல்லி இந்த இபாதத்தை நிறைவேற்றுவோம். இறுதியாக
நம் எண்ணங்களின் அடிப்படையிலும், நம் தக்வாவின் அடிப்படையிலுமே அல்லாஹ் நம் இபாதத்துகளை அளவிடுவான்
என்பதை நினைவில் கொள்வோம். அல்லாஹ் பறக்கத் செய்வானாக.
என்றும்
அன்புடன்,
சுபுஹான்
சுல்தான்
Comments
Post a Comment